CopyPastehas never been so tasty!

ஏன் அ.தி.மு.கவிற்கும் தே.மு.தி.கவிற்கும் வாக்களிக்கக்கூடாது?

by anonymous

  • 0
  • 0
  • 1
245 views

‘ஜெயலலிதா திருந்தவில்லை. திருந்தவும் மாட்டார்’’ - அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிய வைகோ சொன்னது இது. ஜெயலலிதா திருந்த மாட்டார் என்பது வைகோவுக்கு ஆறாண்டுகளுக்குப் பிறகுதான் தெரியும் என்பது நம்பக்கூடியது அல்ல. வைகோவின் வசனங்களையே எதிரொலித்த இடதுசாரித் தலைவர்கள் மூன்றாவது அணி அமைக்க, அரசியல் அனுபவமும் குறைந்தபட்சக் கருத்தியலும் உடைய வைகோவை விட்டுவிட்டு விஜயகாந்தின் தலைமையைத் தேடிப் போனது அரசியல் அவலம். ஜெயலலிதா தன் கூட்டணிக்கட்சித் தலைவர்களையும் சொந்தக்கட்சி தலைவர்களையும் எப்படி நடத்துவார் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், இந்த அலட்சியங்களைச் சுயமரியாதை இல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதால் அவை விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால், ஜெயலலிதாவின் அரசியல் என்ன என்பதுதான் விவாதத்துக்கு உரிய விஷயம். மற்றவர்களை மதிக்கிற விஷயத்திலேயே மாறிவிடாத ஜெயலலிதா, தனது அப்பட்டமான பார்ப்பனிய அரசியலிலிருந்து மாறியிருப்பார் என்று எதிர்பார்ப்பது அபத்தத்திலும் ஆகப்பெரிய அபத்தம்.

ஜெயலலிதாவின் கடந்த இரு அய்ந்தாண்டுகால ஆட்சிகளும் தமிழக அரசியல் வரலாற்றில் இருண்டகாலங்கள் என்று சொன்னால் மிகையில்லை. முதல் அய்ந்தாண்டுகால ஆட்சி ஊழல் மலிந்த ஆட்சியாக இருந்தது என்றால் இரண்டாம் அய்ந்தாண்டுகால ஆட்சி சிறுபான்மையினர், தலித்துகள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் எதிராகவும் மனித உரிமைகளுக்கு விரோதமாகவும் இருந்தது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சேதுசமுத்திரத்திட்டம், முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு, அயோத்திப் பிரச்சினை ஆகியவற்றில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ்.நிலைப்பாடுதான். கடந்த அய்ந்தாண்டுகளில் கூட சட்டமன்றத்திற்கு அவ்வளவாக வராத ஜெயலலிதா, நரேந்திரமோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டார். அவரது சேதுசமுத்திரத் திட்ட எதிர்ப்பு என்பதும், சுற்றுச்சூழலியலாளர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டு, இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடுகளிலிருந்தே அமைந்தது.

‘‘யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் முக்கியம்’’ என்கிறார்கள் கலைஞரை எதிர்க்கும் ஈழ ஆதரவாளர்கள். இந்த அளவுகோலின்படி பார்ப்பனிய மதிப்பீடுகளை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் ஜெயலலிதாதான் ஆட்சிக்கு வரக் கூடாதவர். ஜெயலலிதாவின் கூட்டாளியான விஜயகாந்த்தின் படங்கள் வெளிப்படையாகவே முஸ்லீம்களுக்கு எதிராகப் பேசின. பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இட ஒதுக்கீடு, தமிழுணர்வு ஆகிய தமிழகத்தில் கடந்த 45 ஆண்டுகளாக அரசியல்களத்தில் முன்வைக்கப்படும் கருத்தியல் மதிப்பீடுகள் குறித்து விஜயகாந்துக்கு எந்த கருத்தும் இருந்ததில்லை. இத்தகைய கருத்து வெற்றிடம் என்பது எப்போது வேண்டுமானாலும் வலதுசாரிச் சக்திகளுடன் கைகோர்க்கும் அபாயம் நிறைந்தது. கருணாநிதி தனது திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகும்போதெல்லாம் கேள்வி கேட்பதைப் போல் விஜயகாந்தைக் கேள்வி கேட்டுவிட முடியாது. ஏனெனில் விஜயகாந்துக்கு எந்த கருத்தியல் அடித்தளமும் கிடையாது.

‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்பதை முழக்கமாக வைத்து, ஈழ ஆதரவு பேசி, தன் மகனுக்குப் பிரபாகரன் என்று பெயர் வைத்த விஜயகாந்த் அரசியல் கட்சியாக மாறியபிறகு எல்லாவற்றையும் கைவிட்டது கவனிக்கத்தக்கது. ஈழப்பிரச்சினைகளை முன்னிறுத்தி ஜெயலலிதாவையும் விஜயகாந்தையும் ஆதரிப்பதைப் போன்ற அரசியல் அறியாமை வேறு எதுவும் இல்லை. இயல்பாகவே ஜெயலலிதா தமிழின விரோத மனப்பாங்கு கொண்டவர். விஜயகாந்தோ ஈழ இறுதிப்போரின்போது ஷூட்டிங்கில் இருந்தவர். ஊழல், குடும்ப அரசியல், வாரிசு அரசியல் ஆகியவற்றில் கருணாநிதிக்கான மாற்று நிச்சயமாக ஜெயலலிதாவோ விஜயகாந்தோ அல்ல. சொல்லப்போனால் ஊழல், குடும்ப அரசியல் ஆகியவற்றை கருணாநிதி, விஜயகாந்த், ஜெயலலிதா எல்லோரும் செய்வார்கள் என்பதுதான் எதார்த்தம். கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் என்பது மிக மோசமான விஷயம் என்பது மறுப்பதிற்கில்லை. ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் தேவர் ஆதிக்கமாக மாறக்கூடியது.

90களின் பிற்பகுதியில் தென்மாவட்டங்களில் நடந்த சாதிக்கலவரங்களின்போது காவல்துறை அதிகாரிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் முக்குலத்தோர் என்பதும் இவர்கள் சசிகலாவின் செல்வாக்குக்குக் பிறகு நிரப்பப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப ஆதிக்கத்தை விட மோசமானது சாதி ஆதிக்கம். மேலும் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் மூவரும் ஊழல் செய்வார்கள், குடும்ப அரசியல் செய்வார்கள் என்றாலும் அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு, திருநங்கைகளுக்கான நலவாரியம், முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு, பொறியியலில் தமிழ்வழிக் கல்வி, முதல் தலைமுறையில் படிப்பவர்களுக்கு இலவசக்கல்வி, சமச்சீர்க்கல்வி ஆகியவற்றைக் கருணாநிதிதான் செய்வாரே தவிர ஜெயலலிதாவிடமும் விஜயகாந்திடமும் துளியும் இவற்றை எதிர்பார்க்க முடியாது.

எனவே இந்தத் தேர்தலில் நமது கடமை அ.தி.மு.கவுக்கும் தே.மு.தி.கவுக்கும் வாக்களிக்காமல் இருப்பதுதான்.

Comments

  • amir
    سلام امیر26 ازبندرگناوه09192362605

Add A Comment: